×

1 வீரருக்கு 10 ரஷ்ய வீரர் ஒரு பீரங்கிக்கு 50 பீரங்கி: – அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை

உக்ரைன் அதிபர் மாளிகையில் இருந்தபடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றிய வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில், ‘உக்ரைனுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, தனது நட்பு நாடான  பெலாரஸ் வழியாக மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யா தெரிவித்தது. ஆனால், பாதுகாப்பான முறையில் மக்கள் வெளியே அது அனுமதிக்கவில்லை. ஒரு சிறிய பாதையை திறப்பதற்கு பதிலாக, பெரிய வெற்றியை மட்டுமே எதிர்பார்க்கிறது. ரஷ்யாவுடன் மனிதாபிமான அடிப்படையில் போட்ட ஒப்பந்தத்திற்கு பதிலாக உக்ரைனுக்கு கிடைத்தது ரஷ்ய டாங்கிகளும், ராக்கெட்டுகளும்தான். இன்னும் சொல்லப்போனால், மக்கள் வெளியேறுவதற்கான மனிதநேய பாதையில் கண்ணிவெடிகளை அது புதைத்து வைத்துள்ளது. மரியுபோல் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் உணவு, மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு கூட அது அனுமதிக்கவில்லை. உக்ரைன் – ரஷ்ய படைகளுக்கு இடையிலான இடைவெளி பல நகரங்களில் குறைந்துள்ளது. ஒரு உக்ரைன் வீரருக்கு 10 ரஷ்ய வீரர்கள் வருகிறார்கள். ஒரு உக்ரைன் பீரங்கிக்கு 50 பீரங்கிகளை ரஷ்யா அனுப்பியுள்ளது. எங்கள் நாட்டின் நகருக்குள் அவர்கள் நுழையலாம். ஆனால், அங்கு அவர்கள் மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்,’’ என்று பேசியுள்ளார்.* பேச்சுவார்த்தை மூலம் போர் முடிவுக்கு வராது: – பிரான்ஸ் அதிபர் கணிப்புபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறுகையில், ‘பேச்சுவார்த்தைக்கு முன்பாக போர் நிறுத்தம் வர வேண்டும் என்று நான் கூறியதை புடின் ஏற்க மறுத்து விட்டார். அவர் வழக்கமான சமரச பேச்சுவார்த்தையை கடினமானதாக மாற்றி விட்டார். எனவே, சமரச பேச்சுவார்த்தை மூலமாக போர் முடிவுக்கு வரும் என நான் நினைக்கவில்லை,’ என தெரிவித்தார். இதன்மூலம், உக்ரைன் அதிபரை அழித்து அந்த நாட்டை ரஷ்யா முழுமையாக அபகரித்த பிறகே இந்த போர் முடிவுக்கு வரும் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.* அல்பேனியா தூதரகம் அழிப்பு கார்கிவ் நகரில் கடுமையான தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், அங்குள்ள அல்பேனியா நாட்டின் தூதரகத்தின் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அல்பேனியா, போர் நிறுத்துமாறு ரஷ்யாவை வலியுறுத்தி உள்ளது.* கருங்கடல் நாடுகளின் சண்டையால் பட்டினியால் வாட போகும் மக்கள்ரஷ்யா – உக்ரைன் போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வதோடு, மத்திய கிழக்கு நாடுகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவும், உக்ரைனும் உலக அளவில் ஏற்றுமதி செய்யும் கோதுமையின் அளவு கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். கருங்கடலை ஒட்டி பரந்து விரிந்த வளமான விவசாய நிலங்கள் கொண்ட உக்ரைனின் தானியங்களை நம்பி ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கில் பல நாடுகள் உள்ளன. ரஷ்யா உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளராக உள்ளது. கோதுமை உற்பத்தியில் உக்ரைன் நான்காவது இடத்தில் உள்ளது. இரு நாடுகளும் இணைந்து 19 சதவீத சோள ஏற்றுமதியைச் செய்து வருகின்றன.உக்ரைனில் தற்போது நடந்து வரும் போர், இன்னும் பல வாரங்கள் தொடர்ந்தால், உக்ரேனியர்கள் கோதுமை பயிரிடுவது தடுக்கப்படும். மேற்கத்திய நாடுகளால் ரஷ்ய நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் ரஷ்யா உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை செய்வதும் தடுக்கப்படும். இதன் விளைவாக, தானியங்களின் விலை தொடர்ந்து உயரும். பிரட், பால், இறைச்சி மற்றும் பிற பொருள்களின் விலைகள் கடுமையாக உயரும் அபாயமும் உள்ளன.லெபனான் 81 சதவீத கோதுமையை உக்ரைனிடம் இருந்தும், 15 சதவீதம் கோதுமையை ரஷ்யாவில் இருந்தும் வாங்குகிறது. எகிப்து 60 சதவீத கோதுமையை ரஷ்யாவில் இருந்தும், 25 சதவீத கோதுமையை உக்ரைனிடம் இருந்தும் வாங்குகிறது. துருக்கியும் 66 சதவீத கோதுமையை ரஷ்யாவில் இருந்தும், 10 சதவீத கோதுமையை உக்ரைனில் இருந்தும் இறக்குமதி செய்து வருகிறது. இதனால், எகிப்து, லெபனான் போன்ற உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அரசு மானியத்துடன் வழங்கப்படும் கோதுமையை நம்பி ஏராளமான மக்கள் உள்ளனர். போர் தொடரும் பட்சத்தில் தற்போதுள்ள இருப்புகள் காலியாகி, ஜூலை மாதத்தில் அங்கு பெரும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் எகிப்து, லெபனானில் அதிகப்படிமான மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கென்யா, நைஜீரியா போன்ற நாடுகளிலும், பற்றாக்குறையால் விலைவாசி உயரும் வாய்ப்பும் உள்ளது. * 75 லட்சம் குழந்தைகள்யுனிசெப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் நேற்று முன்தினம் நடந்த  ஐநா கூட்டத்தில் பேசுகையில், ‘உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கிய பிப்ரவரி 24ம் தேதியில் இருந்து குறைந்தது 27 குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளனர். 42 பேர்  காயமடைந்து உள்ளனர். இன்னும் எண்ணற்றோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் உள்ள 75 லட்சம் குழந்தைகளையும், இளைஞர்களையும் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று அவர் வலியுறுத்தி உள்ளார். * ரஷ்யா எண்ணெய் அமெரிக்கா தடைரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அந்நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதை தொடர்ந்து வலியுறுத்துகிறார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிவாயு, நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதிக்க அதிபர் பைடன் முடிவு எடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட உள்ளார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது….

The post 1 வீரருக்கு 10 ரஷ்ய வீரர் ஒரு பீரங்கிக்கு 50 பீரங்கி: – அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை appeared first on Dinakaran.

Tags : Chancellor ,Zelansky ,President ,House ,of ,Ukraine ,Dinakaran ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு